மக்கள் ஆதரவு மீண்டும் போராடும் உற்சாகத்தைத் தருகிறது! பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் சிவந்தன்!!
இன்று 7வது நாளாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேய நடைபயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் உறுதியோடு தன் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தையிட்டு மக்கள் வெளிப்படுத்தும் ஆதரவு மீண்டும் போராடுவதற்கான உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இன்று பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
எமது மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு நிற்கின்றனர். இன்றும் முகாம்களில் வாடும் அவர்களது நிலையையிட்டு சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். எமது மக்களின் சுதந்திரமான வாழ்வு உறுதிசெய்யப்படவேண்டும் என்பதே எனது நடைபயணத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந் நடைபயணத்தின்போது பெருமளவு உள்ளுர் மக்களை தான் சந்தித்து தனது நோக்கம் குறித்து விளக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் கிறித்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த சந்திப்பின்போது அங்கு கூடியிருந்த மக்கள் தனக்கு பெரும் ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது ஐ.நா நோக்கிய நடைபயணத்தில் தற்போது பாரிஸ் நகரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சிவந்தன், எதிர்வரும் ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை பாரிஸ் நகரைச் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிசில் தமிழர் பெருமளவில் கூடும் ’லாச் சப்பல்’ பகுதியில் சிவந்தனுக்கு பெரும் வரவேற்பளிக்க பாரிஸ் தமிழர் அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக பொங்குதமிழுக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 1000 கிலோ மீற்றர் வரையான தூரம் கொண்ட இந்நடைபயணத்தில் ஐ.நா வை சென்றடையும் காலம் குறித்து தீர்க்கமாக இன்னும் முடிவாகவில்லை. தினமும் காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை தொடர்ச்சியாக 45 முதல் 50 கிலோ மீற்றர்வரையான தூரத்தை அவர் நடந்து வருகின்றார். எனினும் ஐ.நா வை அடையும் காலம் காலநிலை, உடல்நிலை என்பதைப் பொறுத்து மாறுபடலாம் என அவருக்கு துணையாக நடை பயணத்தில் ஈடுபட்டுவரும் தொண்டர்கள் தெரிவித்தனர்.
பாரிசிலிருந்து தொடர இருக்கும் பயணம் பெரும் மலைப் பகுதிகள் ஊடாக அமைய இருப்பதால் அவரது பயணம் இன்னும் சிரமமானதாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. எனினும் தனது நோக்கில் மிகவும் உறுதியாக உள்ள சிவந்தன், தனது பயணம் பெரும் துன்பத்தில் உழலும் தமிழீழ உறவுகளின் பிரச்சனைகள்மீது சர்வசேத்தின் கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார்.
சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளமை தெரிந்ததே.
நேற்று ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்ட சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தபோதும் இது சாதாரண நோவு மட்டுமே எனக்கூறிய சிவந்தன், உடல்நிலை தொடர்பாக தனக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையெனவும் தனது பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொள்ளும் மனத்துணிவையும் உறுதியையும் தான் கொண்டிருப்பதாகவும் பொங்குதமிழுக்கு தெரிவித்தார்.
பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சாகம் கொடுத்து வரும் அதேவேளை, மேலும் பலர் இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.